Saturday, December 29, 2007

பிரளயம் என்பது ஒரு கற்பனையா!

ஒவ்வொரு யுகம் முடியும்போதும் உலகம் அழிந்துவிடும் என்கிறார்கள். ஆனால் உண்மையில் உலகமா அழிகிறது! இல்லை உலகில் வாழும் மனிதர்கள் தாவரங்கள் உயிரினங்கள் என்று அனைத்தும் அழிந்து விடுகின்றன. ஒரு சுழற்சிபோல் மீண்டும் உலகம் புத்துயிர் பெற்று புது ஜீவன்களுடன் அடுத்தயுகத்தின் காலக் கடிகாரங்கள் சுழல ஆரம்பிக்கின்றது.

சரி இந்த உலகம் அழிகிறது என்றால்… எப்படி அழியும்? என்ற கேள்வி ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் எழத்தான் செய்யும். சில சோதிட வல்லுநர்கள் சொல்வதை முதலில் பார்ப்போம்.

2010க்குப் பிறகு உலக அளவில் பூகோள மாற்றங்கள் நிகழும். 2011ல் உலகில் பேரழிவு ஏற்பட்டு தர்மசிந்தனை உள்ளவர்களும் நல்லவர்களும் மட்டுமே உயிரோடு இருப்பர்.

உலகம் அழியும் காலத்தில் யானைத் துதிக்கையின் அளவு மழை பொழியும். ஆழிப் பேரலை ஆட்கொண்ட தென் மதுரை அதாவது குமரிக் கண்டம் மீண்டும் தோன்றும்.

இது மட்டுமல்ல மேலும் சிலர் சொல்லியிருப்பது வியப்பாகவும் வினோதமாகவும்கூட இருக்கிறது. அதாவது சூரியன் மேற்குத் திசையில் உதயமாகுமாம். இப்படி பலரும் உலகத்தின் இறுதி நாட்களைப் பற்றி அச்சில் பதித்த வாக்கியங்கள் நிறைய உள்ளன.

உலகம் நீரில் மூழ்கும் என்கிறார்கள். ஆனால் மலைகளையும் மூழ்கடிக்கும் அளவுக்கு மழை பொழியுமா! கடல் நீரெல்லாம் ஆவியாகி மேகமாகி மழையாகிப் பொழிந்தாலும் அந்த நீர் இந்த அளவுக்கா இருக்கும்! நாம் இன்று சிந்திக்கும் இந்த சிந்தனையை முப்பது வருடங்களுக்கு முன்பே ஒருவர் சிந்தித்து அந்த நீரை அளக்க அளவுகோலோடு புறப்பட்டு விட்டார்.

அவர்தான் யா. பெரல்மான். ரஷ்யாவைச் சேர்ந்த இவரை ஒரு கணித வல்லுநர் என்று சொல்லலாம். இவரது விளையாட்டு கணிதம் என்ற நூலில் உள்ள கணித புதிர்கள் மிகவும் சுவையானவை, அறிவை வளர்ப்பவை. இவர் விவிலியித்தில் சொல்லப்படும் பிரளயம் ஏற்பட்டதாகக் கூறும் காலகட்டத்திற்குச் சென்று தனது கணக்குப் பணியைச் செய்திருக்கிறார்.

முன்னொரு காலத்தில் அல்லும் பகலும் அடாது பெய்த அடை மழையால் உலகமெல்லாம் வெள்ளம் பெருகி உயரமான மலைகளை எல்லாம் மூழ்கடித்ததாக பிரளயம் பற்றி விவரிக்கிறது விவிலியம்.

தன்னைப் படைத்த கடவுளை மறந்து உண்மை துறந்து நேர்மை தவிர்த்து கயமை பொய் போன்ற தீய குணங்களைத் துணையாக்கிக் கொண்டு ஆடாத ஆட்டம் போட்ட மனிதனைக் கண்டு இறைவன் ‘பூமியில் இந்த பாழாய்ப் போன மனிதனை ஏன்தான் படைத்தேனோ’ என்று தலை தலையாய் அடித்துக் கொண்டாராம்.

அப்பொழுது அவரது மனதில் பளிச் சென்று சோடியம் விளக்கு எரிந்தது. ‘நாம் படைத்த இந்த மனிதனை பூமியில் இல்லாமல் அழித்து விட்டால் என்ன!’ என்று நினைத்தார். (இந்த இருபதாம் நூற்றாண்டுக் கொடுமைகள் கடவுள் கண்களில் படவில்லையோ! அப்படியே உலகை அழிக்க நினைத்தாலும் நம்ம ஆளுங்க விண்வெளி நகரத்துக்கு எல்லாவற்றையும் நாடு கடத்திவிட மாட்டார்களா என்ன!)

குற்றமற்றவனாகிய நோவாவை மட்டும் கடவுள் அழிக்காமல் விட்டுவிட நினைத்தார். இந்தக் காலத்தில் இப்படி ஒருவராவது கடவுள் கண்களுக்குத் தென்படுவாரா? நோவாவை அழைத்து தான் இந்த உலகத்தை அழிக்கப் போவதாகவும். 300 முழம் நீளமும் 50 முழம் அகலமும் 30 முழம் உயரமும் கொண்ட ஒரு கப்பலை உருவாக்கிக் கொள்ளுமாறு கூறினார். நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் (குடும்பத் தலைவன் நல்லவனென்றால் குடும்ப உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு போலும்.) அவனது பிள்ளைகளின் குடும்பங்களையும் மட்டுமன்றி ஒவ்வொரு உயிர் வகையையும் அழிவிலிருந்து காப்பாற்றப் போகும் கப்பல் அது.

உலகிலுள்ள உயிர்வகைகளில் ஒவ்வொரு சோடியை இந்த கப்பலுக்குள் அழைத்துச் சென்று நீண்டதொரு காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு நோவாவுக்கு கடவுள் கட்டளையிட்டார்.

உலகில் உயிர்வாழும் அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் பொருட்டு கடவுள் ஒரு பிரளயத்தை உண்டாக்கினார். வெள்ளம் பெருகி மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் அழித்திடச் செய்தார். பூமியின் நாற்பது நாட்கள் அல்லும் பகலும் அடை மழை பெய்தது. வெள்ளம் மேலும் மேலும் பெருகியது. நோவாவின் கப்பல் அந்த வெள்ளத்தில் மிதந்தது.

வெள்ள நீர் வான்முட்ட நின்ற மலைகளையும் மூழ்கடித்தது. அந்த மலைகளுக்கும் மேல் பதினைந்து முழம் உயரத்துக்கு வெள்ளம் பெருகி நின்றது. பூமியில் ஜனனித்த அனைத்து உயிரினங்களும் மடிந்தன. ஆனால் நோவா மட்டும் அவன் உடன் இருந்தவர்களோடும் உடன் இருந்த உயினங்களோடும் தப்பிப் பிழைத்து விட்டான்.

மேலும் நூற்றிப்பத்து நாட்களுக்கு இந்த பெரு வெள்ளம் பூமியில் நின்றிருந்தது. அதன்பிறகுதான் அடங்கிற்று. கப்பலை விட்டு நோவா வெளியே வந்தான். அவன் காப்பாற்றி வைத்திருந்த உயிர் வகைகள் எல்லாம் வெளியே வந்தன. உலகில் மீண்டும் உயிர்கள் பல்கிப் பெருகிற்று.

இந்தப் பிரளயக் கதையிலிருந்து இரண்டு கேள்விகளை எழுப்புகிறார் பெரெல்மான்.
1. எவ்வளவுதான் கனத்த மழை பெய்தாலும் பூமியை வெள்ளம் மூடி மிக உயர்ந்த மலைகளை எல்லாம் மூழ்கடித்து மேலும் உயர்ந்து நிற்க முடியுமா?
2. நோவாவின் கப்பல் உலகிலுள்ள அனைத்து உயிர் வகைகளிலும் ஒவ்வொரு சோடிக்கு இடம் ஒதுக்கும்படி அத்தனைப் பெரிதாக இருந்திருக்க முடியுமா?


இந்த இரண்டு கேள்விகளுக்கும் கணித வழியில் விடை சொல்கிறார்.
பிரளயம் நீர் எங்கிருந்து வந்தது? மழையாக…வளிமண்டலத்திருந்துதான் வந்திருக்க வேண்டும். பிரளயத்திற்குப் பின் இவ்வளவு நீரும் எங்கே போனது? புவிப் பரப்பையே மூழ்கடித்த அந்த பெரு வெள்ளம் மண்ணால் உட்கொள்ளப்பட்டு தரைக்கடியில் போயிருக்க சாத்தியமில்லை. ஜீ பூம்பா வழியிலும் மறைந்திருக்க முடியாது. ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்வது ஒன்றுதான் வழி.

அதனால் பிரளய நீர் இப்போதும் வளிமண்டலத்தில்தான் ஆவியாக இருக்க வேண்டும். அந்த ஆவி எல்லாம் மழைத்துளிகளாய் மாறி பூமியின் மீது வீழுந்தால் மீண்டும் மற்றொரு பிரளயம் உண்டாகி மீண்டும் மலைகளை மூழ்கடிக்கும் வெள்ளம்….அழிவு…

ஆனால் இது சாத்தியமா?

வளிமண்டலத்திலுள்ள ஈரத்தின் அளவு – ஒவ்வொரு சதுர மீட்டர் பரப்பில் உள்ள காற்றில்; சராசரி 16 கிலோகிராம் ஈரப்பதம் (ஆவி) இருப்பதாகவும் ஒருபோதும் இது 25 கிலோ கிராமுக்கு அதிகமாக இருப்பதில்லை என்று வானிலை ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன.

இந்த ஆவி நீராகி பூமியில் விழுந்தால் மழைநீரின் ஆழம் எவ்வளவு இருக்கும். 25கிலோகிராம் (25000கிராம்) நீரின் கனபரிமாணம் 25000 கன சென்டிமீட்டர்.

1 சதுரமீட்டர் அதாவது 10000 சதுர சென்டி மீட்டர் பரப்பின்மீது நிற்கக் கூடிய நீரின் கனபரிமாணம்.
இந்த கனபரிமாணத்தை அடிப்பரப்பினால் வகுத்தால் இந்த நீரின் ஆழம் கிடைக்கும்.
25000 % 10000 = 2.5 சென்டி மீட்டர்.
வெள்ளம் இந்த 2.5 செ.மீ க்கு மேல் உயர்ந்திருக்க முடியாது. ஏனெனில் அதற்குமேல் உயர்வதற்கு வளிமண்டலத்தில் நீர் இருந்திருக்காது. இந்த உயரமும்கூட மண்ணால் நீர் உறிஞ்சப்படாமல் இருந்திருந்தால்தான் சாத்தியம்.


( பல இடங்களில் மழை சில சமயம் 2.5 செ.மீ க்கு அதிகமாகப் பெய்வது உண்டு. ஆனால் இந்த மழை இந்த இடத்திற்கு நேர்மேலே இருக்கும் வளிமண்டலத்தில் இருந்து மட்டும் வருவதில்லை. சுற்றுப்புற இடங்களின் மேலிருக்கும் வளிமண்டலத்திலிருந்து காற்றினால் அடித்து வரப்பட்டதாகும். ஆனால் விவிலியப்படி ஒரே நேரத்தில் புவிப் பரப்பு அனைத்தும் பிரளயத்தால் மூழ்கடிக்கப் பட்டது என்று சொல்லப் படுகிறது. இங்கே ஓரிடம் மற்றொரு இடத்திடம் ஈரத்தைக் கடன் வாங்கி மழைபொழிய வாய்ப்பில்லை.)

2.5 செ.மீ உயரம் எங்கே? 9 கி.மீட்டருக்கு நெடிதுயர்ந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை மூழ்கடிக்கும் படியான உயரம் எங்கே? வெள்ளப் பெருக்கின் உயரத்தை விவிலியம் சற்று இல்லை…இல்லை.. மிகவும் அதிகமாக அதாவது ஒன்றுக்கு 300000 மடங்காக மிகைப்படுத்துகிறது.

அப்படி பிரளயம் ஏற்படும்படி மழை பெய்திருந்தாலும் அது மெய்யான மழையாக இருந்திருக்க முடியாது. அப்படியிருந்தாலும் தூறலாகத்தான் இருந்திருக்க முடியும். காரணம் 40 நாட்களுக்கு ஓயாமல் அல்லும் பகலுமாய் பெய்த மழையின் அளவு 25 மில்லிமீட்டர்தான். நாளொன்றுக்கு 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவானது.

இனி இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம்.
நோவா காப்பாற்ற வேண்டிய அத்தனை ஜீவன்களுக்கும் அந்தக் கப்பலில் இடம் இருந்திருக்குமா?

விவிலியத்தின்படி நோவாவின் கப்பல் மூன்று அடுக்குகள் கொண்டது. ஒவ்வொரு அடுக்கும் 300முழம் நீளமும் 50 முழம் அகலமும் உடையது. (ஒரு முழம் என்பது 45 செ.மீ.) அதாவது 135 மீட்டர் நீளமும் 22.5மீட்டர் அகலமும் பரப்பளவில் கணக்கிட்டால் 3040 சதுர மீட்டர். மூன்று அடுக்குகளும் சேர்த்து கப்பலில் இருந்த வாழ்விடத்தின் மொத்தப் பரப்பு 9120 சதுர மீட்டர்.


இந்த இடம் 3500 வகைகளையுடைய பாலூட்டிகளுக்கு மட்டும்கூட போதாமானதல்ல. இந்தப் பாலூட்டிகளின் ஒவ்வொரு சோடிக்கும் 2.6 ச.மீ பரப்பளவுள்ள இடம் வேண்டும். இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் வைத்திருக்க முடியாது. தனத்தனி கூண்டுகள் வேண்டும். பாலூட்டிகளைத் தவிர மற்ற ஜீவராசிகள் அதாவது ஒரு குத்து மதிப்பாய்ப் பார்த்தால்கூட
பறவைகள் - 13000
ஊர்வன - 3500
நீர்நில வாழ்வன -- 1400
சிலந்தி இனத்தவை 16000
புழு பூச்சி இனத்தவை- 360000
இத்தனை உயினிங்கள் மட்டுமல்ல இவற்றிற்கு வேண்டிய தீனிக்கும் (150 நாட்களுக்கு) இடம் ஒதுக்க வேண்டும்.
இதில் நோவாவுக்கும் அவனது பெருங்குடும்பத்துக்கும் வாழ்விடம் ஒதுக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு சோடிக்கும் இடமளித்தாலும் விவிலியத்தில் கூறுவதைக் காட்டிலும் அந்தக் கப்பல் மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் விவிலியம் கூறும் பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்குப் பெரியதாய் அமைந்திருக்கும் என்பது நம்ப முடியாதது.
இப்படியொரு நிகழ்வு உண்மையில் நடந்திருக்க முடியாது. அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது ஒரு மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோ ஏற்பட்ட வெள்ளமாகத் தான் இருந்திருக்க வேண்டும். எஞ்சிய விபரங்கள் அனைத்தும் ஒரு கற்பனை சிருஷ்டியே.
பிரளயத்தைப் பற்றிய இந்த விவிலியக் கதையை கணிதம் பொய்யாக்குகிறது.
நம்ம மகாபாரம் இராமயணக் காலங்களுக்கும் சென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கலாமே! யாராவது தயாரா?

கனிஷ்கா, தென்காசி